×

சட்டம் பயிலும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் சத்தியதேவ் லா அகாடமி முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை: சட்டம் பயிலும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் சத்தியதேவ் லா அகாடமியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முகாம் அலுவலகத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் “சத்தியதேவ்” நினைவாக சட்டம் பயிலும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் “சத்தியதேவ் லா அகாடமி”-யை தொடங்கி வைத்து, இலட்சினையை வெளியிட்டார். இந்தியாவில் சட்டத்தொழில் புரிவது சாதாரண மக்களுக்கு எளிதான காரியம் அல்ல. அப்படிப்பட்ட வழக்கறிஞர் தொழிலில் குறிப்பிட்ட ஒரு சிலரே ஆதிக்கம் செலுத்தி வந்தனர். “வழக்கறிஞர் சட்டம்” 1961ம் ஆண்டு இயற்றப்பட்ட பின்னரே வழக்கறிஞர் தொழில் ஒருமுகப்படுத்தப்பட்டு சட்டப்படிப்பு பரவலாக்கப்பட்டது.

சமூக நீதி ஏற்பட்ட பின்னரே, பல்வேறு சமூகங்களிலிருந்தும் வழக்கறிஞர்கள் இத்தொழிலுக்கு வரத்தொடங்கினர். அதிக அளவிலான சட்டக்கல்லூரிகள், சட்டப் பல்கலைக்கழகங்கள் வந்த பிறகும், சட்டப்படிப்பு சாதாரண குடும்பத்திலிருந்து வரும் மாணவர்களுக்கு சவாலாகவே உள்ளது. இதனை கருத்தில் கொண்டு ”சத்தியதேவ் லா அகாடமி”, அரசு சட்ட கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த அகாடமியில் சட்ட நிபுணர்கள், சட்ட ஆசிரியர்களைக் கொண்டு சட்டக்கல்லூரி பாடத்திட்டத்தின் அடிப்படையில், மாணவர்களுக்கு பாடங்களைக் காணொலியில் பதிவு செய்யப்பட்டு “யூ-டியூப்” வலைதளத்தில் பதிவேற்றப்படும். மாணவர்கள் அவற்றை கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறலாம்.

பாடத்திட்ட காணொலி தயாரிப்பதற்கான நிதியை ஜெய்பீம் படத்தயாரிப்பாளர், நடிகர் சூர்யாவின் “2டி எண்டர்டெயின்மெண்ட்” நிறுவனம் வழங்கிட உள்ளது. இந்த “சத்தியதேவ் லா அகாடமியை தொடங்கி வைத்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு அதனை மேலும் ஊக்குவித்து, அவர்கள் அடுத்து என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எப்படி படிக்கலாம் என்று வழிகாட்டி வருகிறது. அதுமட்டுமின்றி, ஆண்டுக்கு 10 இலட்சம் இளைஞர்களை படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் மேம்படுத்தி நாட்டுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு “நான் முதல்வன்” திட்டம் செயல்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 463 பொறியியல் கல்லூரிகளில் 4,72,972 மாணவர்களும், 861 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 8,51,338 மாணவர்களும் பயனடைந்துள்ளனர். பொறியியல் கல்லூரிகளில் 2022-23ம் ஆண்டு “நான் முதல்வன்” திட்டத்தின் மூலமாக 1,15,682 இறுதியாண்டு மாணவர்களுக்கு சைபர் செக்யூரிட்டி, சைமன்ஸ், டசால்ட், மைக்ரோசாப்ட் உள்பட 70க்கும் மேற்பட்ட திறன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளது.

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் “நான் முதல்வன்” திட்டத்தின் மூலமாக மாணவர்கள் அதிகபட்சமாக ஆண்டுக்கு 40 இலட்சம் வரையிலான ஊதியத்தில் வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளனர். சட்டம் பயிலும் மாணவர்களுக்கு “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்க “சத்தியதேவ் லா அகாடமி” நிர்வாகிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

*‘எளிய பின்புலங்களில் இருந்து வரும் மாணவர்களின் திறன் வளர்க்க வழிகாட்டும்’
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: 1961ம் ஆண்டு வழக்கறிஞர் சட்டம் இயற்றப்பட்ட பிறகும், இடஒத்துக்கீடு கொண்டுவரப்பட்ட பிறகுமே எளிய மக்களும் சட்டத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். எளிய பின்புலங்களில் இருந்து வரும் அவர்களது திறன்களை வளர்க்க, ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவை இயக்குநராக கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள சத்யதேவ் லா அகாடமியை தொடங்கி வைத்தேன்.

ஏழை – எளிய மக்களின் கல்விக்காக உள்ளார்ந்த அக்கறையோடு தொடர்ச்சியாக செயல்பட்டுவரும் சூர்யாவின் பங்களிப்பைப் பாராட்டுகிறேன். சட்டத்தொழிலும், மருத்துவத் தொழிலும் மற்ற தொழில்கள் போல் அல்ல. மற்றவை பணி புரிவது, இவை பயிற்சி செய்வது. எனவே, நான் முதல்வன் திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு இந்த அகாடமியின் மூலம் பயிற்சி அளிக்கக் கேட்டுக் கொண்டுள்ளேன்.

The post சட்டம் பயிலும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் சத்தியதேவ் லா அகாடமி முதல்வர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Satyadev Law Academy ,Chennai ,G.K. Stalin ,Tamil Nadu ,Principal ,Satyadev La Academy ,
× RELATED செல்லப்பிராணிகள் வளர்ப்போர்...